பொன்னேரி: மீஞ்சூர் அருகே நேற்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனத்துக்கு அரசு நிதியில் சாலை அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயராமபுரம் பகுதியில் ஒரு தனியார் குளிர்பதன கிடங்கு அமைந்துள்ளது. இக்கிடங்குக்கு ஏற்கெனவே 13 அடி சாலை உள்ளது.
இந்நிலையில், இந்தத் தனியார் நிறுவனத்துக்கு வாகனங்கள் சென்றுவர வசதியாக, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, நமக்கு நாமே திட்டத்தின்கீழ், மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் ₹36 லட்சம் 40 அடி அகலத்துக்கு சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னேரி வட்டாட்சியர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், தனியார் நிறுவனம் வழியே அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அரசு நிதியில் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாலை சாலை பணி நடைபெறும் இடத்தில் நாலூர் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தற்போது தனியார் நிறுவனத்துக்காக சாலை அமைக்கும் இடம், ஏற்கெனவே துணை மின்நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிலம். எனவே, அந்நிலத்தில் தனியார் நிறுவனத்துக்காக சாலை அமைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கக்கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு தற்காலிகமாக சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பரபரப்பு நிலவியது.