ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மசினகுடி – தெப்பகாடு சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமாகவும், சிலர் தடையை மீறியும் இவற்றை பயன்படுத்துகின்றனர்.
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள், பொது இடங்களில் வீசி செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனங்கள் என்பதால் இப்பகுதிகளில் அத்துமீறி நுழைவது, குப்பைகளை வனங்களில் வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கிடக்கும் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி – தெப்பக்காடு சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை ஒன்று புல்வெளியில் கிடந்த பிளாஸ்டிக்கை தனது தும்பிக்கையால் எடுத்து உட்கொள்கிறது. இதனை அவ்வழியாக சென்ற நபர்கள் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,“பிளாஸ்டிக்குடன் வீசப்படும் உணவு கழிவுகளால் கவர்ந்திழுக்கப்படும் வனவிலங்குகள் அவற்றை பிளாஸ்டிக்குடன் சாப்பிட்டு விடும். இதனால், வயிற்று கோளாறு ஏற்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரிக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.