கொல்கத்தா: மேற்குவங்கத்தின் பள்ளிக் கட்டிடம் மீது கையெறி வெடிகுண்டு வீசிய சம்பவத்தால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் நேற்று மர்ம நபர்கள் கையெறி வெடிகுண்டு வீசியதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்த பாரக்பூர் போலீசார், கையெறி குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர். பராக்பூர் திரிணாமுல் எம்பி அர்ஜுன் சிங், கையெறி குண்டு வீசப்பட்ட பள்ளிக்கு நேரில் ெசன்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து ஹூக்ளி பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி கூறுகையில், ‘திரிணாமுல் ஆட்சியில் கையெறி வெடிகுண்டு சம்பவங்கள் பல இடங்களிலும் நிகழ்கின்றன. சிறிய குழந்தைகள் கூட வெடிகுண்டுகளை வீசுகின்றன’ என்றார். சிபிஐ(எம்) தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், ‘மேற்குவங்க மாநிலம் துப்பாக்கி குண்டுகளில் குவியல் இடமாக மாறிவிட்டது. தினமும் குண்டுவெடிப்பு சம்பவங்கள்ள் நிகழ்ந்து வருகின்றன’ என்றார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் மேற்குவங்க மாநில தலைமை செயலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்ட சம்பவத்தில் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக போலீஸ் வேனுக்கு தீ வைப்பு, போலீசார் மீது தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 12க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.