வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்படுகிறது. வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெரும் விதமாக கூட்டு குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்திற்கு என கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் சாலைகளின் மைய பரப்பில் குழாய் பதித்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கோவிந்தகுடி விருபாட்சிபுரம், செம்மங்குடி, புலவர் நத்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு குடிதண்ணீர் கடந்த சில நாட்களாக வெளியேறி வருகிறது. குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்வதற்கு முன்னதாக ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனமானது கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அதற்கு உரிய பட்டியல் தொகை கடந்த அதிமுக ஆட்சியில் வழங்காமல் பல லட்ச ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிர்வாகம் தற்போது பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சாலையில் பெரிய அளவில் பள்ளங்களை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படும் வகையில் உள்ளது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யும் பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் விருப்பாச்சிபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு வருகின்ற 20ம் தேதி சரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.