ஹைதராபாத்: சர்தார் வல்லபபாய் படேலின் தீவிர முயற்சியாலும், நடவடிக்கைகளாலும்தான் நிஜாம் மன்னர்களின் பிடியில் இருந்த ஹைதராபாத் மாகாணம் சுதந்திர இந்தியாவில் இணைந்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
சுதந்திர இந்தியாவில் ஹைதராபாத் இணைக்கப்பட்ட நாளான நேற்று `ஹைதராபாத் விமோசன நாள்’ எனும் பெயரில் மத்திய கலாச்சாரத் துறை சார்பில் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
ஹைதராபாத் விமோசன தினத்தை இத்தனை நாட்கள் வரை எந்த கட்சியும் கொண்டாடவில்லை. ஆனால், பாஜக மட்டுமே இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை கொண்டாடியே தீர வேண்டுமெனும் நோக்கில் அரசு விழாவாக கொண்டாடுகிறது.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், சுதந்திர இந்தியாவில் சேர நிஜாம் மன்னர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலின் தீவிர முயற்சியால் இந்தியாவுடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது. 1948-ம் வருடம் செப்.17-ம் தேதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.
குறுக்கே வந்த கார்
பின்னர் ஹரிதா பிளாசாவுக்கு அமித் ஷா கார் சென்றபோது அவரது காருக்கு முன்பாக சிவப்பு நிற கார் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர், அந்த காரை அப்புறப்படுத்தினர். காரில் இருந்த காகஜ் நகரை சேர்ந்த டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா அரசு சார்பில் நடைபெற்ற ஹைதராபாத் விமோசன தின விழாவில் முதல்வர் கே. சந்திர சேகர ராவ் கலந்து கொண்டு பேசினார்.