பிஜீங்,
உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், குரங்கம்மை என்ற புதிய வைரஸ் உலக நாடுகளில் பரவத்தொடங்கியது.
குரங்கம்மை வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பரவத்தொடங்கியுள்ளது. இந்த வைரசால் சில நாடுகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவிலும் தற்போது குரங்கம்மை வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் சிச்சுவான் மாகாணம் சொங்கியூங் நகருக்கு வந்த நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வைரசை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், குரங்கம்மையில் இருந்து தற்காத்துக்கொள்ள 2 வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் வூ ஷங்யூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நமது அன்றாட உடல்நலம் சார்ந்த வாழ்வில் குரங்கம்மை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முதல் அறிவுரை என்னவென்றால் வெளிநாட்டினரை தொடாதீர்கள். வெளிநாட்டினருடன் தோலுடன் தோல் தொடர்பு கொள்ளாதீர்கள். 2-வது அறிவுரை என்னவென்றால் கடந்த 3 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தொடாதீர்கள், அவர்களுடன் தோலுடன் தோல் தொடர்பு கொள்ளாதீர்கள்’ என்றார்.
குரங்கம்மையில் இருந்து பாதிகாக்க வெளிநாட்டினரை தொடாதீர்கள் என இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் வகையில் பேசிய சீன தொற்றுநோயியல் பிரிவு தலைவர் வூ ஷங்யூ-க்கு சமூகவலைதளம் மூலம் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.