மும்பை: துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் ஆக.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்களின் வரவேற்போடு மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற சீதா ராமம் படத்தின் சக்ஸஸ் மீட்டில் ஷாருக்கான் குறித்து துல்கர் சல்மான் பேசியது வைரலாகியுள்ளது.
ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்ட்டில் சீதா ராமம்
மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான சீதா ராமம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. ஹனுராகவபுடி இயக்கிய இந்தப் படம் பாகிஸ்தான், காஷ்மீர், ஹைதராபாத் போன்ற கதைக்களத்தின் பின்னணியில் காதல் காவியமாக உருவாகியிருந்தது. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாகூரும், ராஷ்மிகா மந்தனா முக்கியமான கேரக்டரிலும் நடித்திருந்தனர். ரசிகர்களுக்கு பிடித்த காதல் படங்களின் வரிசையில் சீதா ராமமும் இடம்பெற்றுள்ளது.
திரையரங்குகளில் தொடர்ந்து ஆதிக்கம்
சீதா ராமம் படம் திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் ப்ரைமிலும் வெளியாகியுள்ளது. ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீதா ராமம், இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கமலின் ‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து சீதா ராமம் படமும், இன்னும் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. மேலும், இந்தப் படம் இதுவரை 95 கோடி ரூபாய்க்கும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான சம்பவம் செய்து வருகிறது.
மும்பையில் சீதா ராமம் சக்ஸஸ் மீட்
இந்நிலையில், சீதா ராமம் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி இந்தி ரசிகர்களிடமும் நல்ல ரீச் ஆகியுள்ளது. இதனையடுத்து மும்பை பறந்த சீதா ராமம் படக்குழு, மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு படத்தின் வெற்றியையும் செலிப்ரேட் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், இயக்குநர் ஹனுராகவபுடி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘வீர்-ஜாரா’ படத்துடன் சீதா ராமம் திரைப்படத்தை ஒப்பிட்டுப் பேசினர்.
ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்
சீதா ராமம் படத்தை ஷாருக்கானின் ‘வீர்-ஜாரா’-வுடன் ஒப்பிட்டுப் பேசியதைக் கேட்ட துல்கர் சல்மான், அதற்கு பதிலளித்தார். “நான் ஷாருக்கானின் தீவிர ரசிகன், அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவர் பலருக்கு இன்ஸ்பிரேஷன். ரசிகர்களை நடத்தும் விதம் இன்றும் என்னை வியக்க வைக்கிறது. யாரிடம் பேச விரும்பினாலும் அனைவரிடமும் அவர் பேசுவார். ஷாருக்கா நடித்த ‘தில்வாலே துல்ஹனியா லெஜோயிங்’ திரைப்படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு நடிகராக இருப்பதைத் தவிர, அவர் ஒரு சிறந்த மனிதர். என்னை அறியாமலேயே அவர் என்னை பாதித்துள்ளார். அவருடன் என்னை ஒப்பிடுவது என் பார்வையில் அவரை அவமானப்படுத்துவது போல் உள்ளது. ஷாருக்கை போல் வேறு யாரும் இல்லை” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.