பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் விடுதி மாணவிகளின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில், சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் சேர்ந்து மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர், சக மாணவிகளின் அந்தரங்க வீடியோ மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் அந்தரங்க வீடியோ வெளியானதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி மட்டும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த பஞ்சாப் மாநில போலீசார், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்ட மாணவியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாட்டி தெரிவித்து உள்ளார்.
“இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க விட மாட்டோம் என்று அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உறுதி அளிக்கிறேன்” என பஞ்சாப் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் கூறியுள்ளார். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி காக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் லீக் ஆன மாணவிகளின் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.