கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (62). அங்கு சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மக்கள் தினசரி மளிகைப் பொருள்கள் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், நடராஜன் தன் கடைக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றத்தை குறைப்பதற்காக மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து `புராஜக்ட் பள்ளிக் கூடம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
அதன்படி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு வகுப்பை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆனைமலையில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு வகுப்பு எடுத்துள்ளனர். அப்போது மாணவிகளின் சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கும்போது,
13 வயது மாணவி ஒருவர் நடராஜன்மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரைப் போலவே 9 வயது முதல் 13 வயது வரையிலான 14 மாணவிகள் அடுத்தடுத்து நடராஜன் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நடராஜன்மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் நடராஜன்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
தொடர்ந்து நடராஜன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.