புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் குறைபாடாக தாக்கல் செய்யப்பட்டு 8 ஆண்டுக்கும் மேலாக சரி செய்யப்படாமல் நிலுவையில் இருந்த 13,147 மனுக்கள் ஒரே நேரத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் கடந்த 1-ம் தேதி நிலவரப்படி இடம்பெற்றுள்ள புள்ளிவிவரத்தின்படி, 70,310 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்ற பதிவாளர் (ஜுடிசியல்-1) சிராக் பானு சிங்கடந்த 15-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:
28 நாட்கள் அவகாசம்
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் குறைகள் இருந்தால், அவற்றை சரிசெய்து 28 நாட்களுக்குள் மீண்டும் தாக்கல் செய்யுமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர். இந்தக் கெடு 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படும். எனினும், அந்த மனுக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. டயரியில் மட்டும் வரிசை எண் கொடுத்து குறித்து வைத்துக் கொள்ளப்படும்.
அவ்வாறு 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு முன்பு குறைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட 13,147 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மனுதாரர்கள் குறைகளை சரிசெய்து புதிய மனுவை தாக்கல் செய்யவில்லை. இதில் 1987-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவும் அடங்கும்.
பல ஆண்டு தாமதம்
மனுக்களை சரி செய்து தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த 13,147 மனுக்களை இனிமேல் பதிவு செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு மொத்தம் 493 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இதில், 5 நீதிபதிகள் அமர்வு முன்பு 343 வழக்குகளும் 7 நீதிமதிகள் அமர்வு முன்பு 15 வழக்குகளும், 9 நீதிபதிகள் அமர்வு முன்பு 135 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நடைமுறையில் மாற்றம்
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்றார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணவும், வழக்குகளை பட்டியலிடும் நடைமுறையில் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என யு.யு.லலித் உறுதி அளித்தார். இதன்படி பட்டியலிடப்படும் முறையில் மாற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.