புதுடெல்லி: அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது.
உலக அளவில் ரயில்களை கட்டமைப்பதில் இந்தியா சிறந்துவிளங்குகிறது. ரயில் தயாரிப்பில் அடுத்த பெரிய நிகழ்வாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வரும் சுதந்திர தின நாளான 2023 ஆக. 15-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் கடந்த மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் ரயிலை ஓராண்டு காலத்துக்குள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாயு என்பது நினைவுகூரத்தக்கது.
சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் உலகின் தலைசிறந்த 5 ரயில்களுள் ஒன்றாக சமீபத்தில் கண்டறியப்பட்டது. மணிக்கு 180 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய இந்தரயில் சிறிய குலுங்கல் கூட இல்லாமல் மிக சொகுசாக பயணிக்க ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது. ஜப்பானின் புல்லட் ரயில் 100 கி.மீ. வேகத்தை 55 நொடிகளில் எட்டும் நிலையில், வந்தே பாரத் வெறும் 52 நொடிகளில் அந்த வேகத்தை எட்டிவிடும்.
நல்ல வேகம் தவிர, பாதுகாப்பான, நிலையான மற்றும் குறைந்த ஆற்றலை பயன்படுத்தக்கூடிய ரயில்களை சர்வதேச தரத்தில்உருவாக்குமாறு பொறியாளர் களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ரயில் நிலையங்களின் தூய்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.