ஒரு சமயத் துறவியாக இருந்தாலும், உலகின் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவராகவும், கடவுள் நம்பிக்கை இல்லாத பலரையும் கூடத் தன் பால் ஈர்க்கின்றவராகவும் விளங்குகிறார், சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் என்றதும் பலரது நினைவுக்கு வருவது அவரது சிகாகோ உரை. உலகின் கவனத்தை ஈர்த்த அந்த உரையை விவேகானந்தர் இதே நாளன்று தான் நிகழ்த்தினார்.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில், அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே (Sisters and Brothers of America) என ஆரம்பித்து தனது பேச்சை தொடங்கினார், விவேகானந்தர். அப்போது அவருக்கு 30 தான்.
அவருக்கு முன் பேசியவர்கள் எல்லாம் “கணவான்களே .. சீமாட்டிகளே ” (Ladies and Gentlemen) என்று பேச்சைத் தொடங்கியபோது, விவேகானந்தரோ அமெரிக்க சகோதரிகளே என பேசத் தொடங்கி பெண்களை முன்னிலைப்படுத்தினார். அவரது உரை அங்குதிரண்டிருந்தவர்களை விழித்தெழச் செய்தது. உலகையே அவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.
“மதங்களின் தாயின் பெயரால் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்! உலகில் உள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைக்கு ஆளானவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியர்களின் கொடுங்கோல் ஆட்சியால் அவர்களின் புனித ஆலயம் உடைந்து சிதறிய ஆண்டிலேயே தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சம் புகுந்த இஸ்ரவேலர்களின் தூய எச்சங்களை நாங்கள் எங்கள் நெஞ்சில் சேகரித்து வைத்துள்ளோம் என்பதை உங்களுக்குச் சொல்வதில் பெருமை கொள்கிறேன். மகத்தான ஜோராஸ்ட்ரிய தேசத்தின் எஞ்சியவர்களுக்கு அடைக்கலம் அளித்து இன்னும் வளர்த்து வரும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.” என்று தனது உரையில் குறிப்பிட்டார், விவேகானந்தர்.
“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வது ஆகிய இரு பண்புகளை உலகிற்கு புகட்டிய மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று குறிப்பிட்டார். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதுடன், அனைத்து மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம் என்றும் விளித்தார் விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் என அறியப்பட்டிருக்கும் அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (NARENDRANATH DUTTA). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சி அடையச் செய்யும் வகையில் இருந்தன. மிகுந்த நினைவாற்றல் படைத்தவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த அவர், சிறுவயதிலேயே இசையையும், இசைக்கருவிகளையும் பயின்றார்.
சுவாமி விவேகானந்தர் உதிர்த்த பொன்மொழிகள் இன்றளவும் நினைவில் கொள்ளப்பட்டு வருகின்றன. உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக்கூடாது – கடவுள் இருந்தால் நாம் அவரைக் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படி இல்லையெனில் நம்பி்க்கை இல்லாமல் இருப்பது நன்று, பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல் என்றெல்லாம் விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM