மங்களூரு: ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட நோயாளியை 2,700 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார் ஓட்டுநர்.
உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் மஹந்தி ஹசன் (29). இவர் கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் மூடபித்ரி அருகிலுள்ள மஸ்திகட்டே பகுதியிலுள்ள பாக்கு கிடங்கில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 25-ம் தேதி இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து மூடபித்ரியிலுள்ள ஆல்வா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மஹந்தி ஹசனை மேல் சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் வேனில் மூடபித்ரியிலிருந்து உ.பி.க்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆக்ஸிஜன் உதவியுடன் அழைத்துச் செல்வதால் குடும்பத்தாரின் சொந்த ரிஸ்க்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த ஆம்புலன்ஸ் சுமார் 2,700 கி.மீ. தூரத்தை 41 மணி நேரத்தில் பயணித்து மொரதாபாத்தை அடைந்தது.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் உரிமையாளரும், ஓட்டுநருமான அனில் ரூபன் மென்டோசா கூறும்போது, “செப்டம்பர் 9-ம் தேதி மருத்துவமனையிலிருந்து மஹந்திஹசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்காக முதலில் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆக்ஸிஜன் உதவியுடன் பயணியை விமானத்தில் ஏற்ற தனியார் விமான சேவை நிறுவனம் மறுத்துவிட்டது.
இதையடுத்து ஆம்புலன்ஸில் பயணிக்க முடிவு செய்து என்னை அணுகினர். நானும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர்களை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.
இது ஒரு சிக்கலான பணி என்றபோதிலும், நான் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உ.பி.க்குச் சென்றேன். செப்டம்பர் 10-ம் தேதி மாலை கிளம்பிய நாங்கள், செப்டம்பர் 12-ம் தேதி காலை மொரதாபாத்தை அடைந்தோம்.பின்னர் அவரை அங்கு ஷிரேயா நியூரோ கேர் மருத்துவமனையில் சேர்த்தோம்” என்றார்.
மஹந்தி ஹசனின் தந்தை பப்பு (65) கூறும்போது, “எனது மகனை பத்திரமாக அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அனிலுக்கு நன்றி சொன்னேன். யாரும் இதுபோன்ற சவாலான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள்” என்றார்.