இரவு பணிக்குச் சென்றவர், காலை கை கால்கள் கட்டிய நிலையில் தூக்கில் சடலமாக மீட்பு! – என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (65). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவுநேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். தினமும் வீட்டிலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரும் அவர், மறுநாள் காலையில்தான் வீட்டுக்குச் செல்வார். இந்த நிலையில், வழக்கம்போல் இரவு பரமசிவம் பணிக்கு வந்திருக்கிறார்.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம்

இதனிடையே, இன்று அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தும் ஷெட்டில் உள்ள கம்பியில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பரமசிவம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். இதைக் கண்ட பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பரமசிவம் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பரமசிவத்தின் உறவினர்கள், பரமசிவம் மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் – ஆத்தூர் சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜாஸ்ரீ ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தார்.

மரணம்

அங்கே போராட்டம் செய்துகொண்டிருந்த பரமசிவத்தின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர். முன்விரோதம் காரணமாக, பரமசிவம் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், “குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.