டர்பன்: இங்கிலாந்து அரசியின் செங்கோலை அலங்கரிக்கும், உலகின் பெரிய வைரமான 500 காரட் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படையுங்கள் என இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. இதுபோல இந்தியாவும், நமது நாட்டின் கோஹினூர் வைரத்தை திரும்ப பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் காலமானார். பின்னர் அங்கிருந்து பக்கிங்காம் அரணைக்கு எடுத்து வரப்பட்டு, 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்தநிலையில், இங்கிலாந்து அரசி உபயோகப்படுத்திய வைரங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அரச பரம்பரை உபயோகப்படுத்தும் செங்கோலில் இடம்பெற்றுள்ள தங்களது நாட்டின், உலகின் மிக பெரிய வைரத்தை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்து உள்ளன.
காலனி ஆட்சியின்போது, 1905-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து மிகப்பெரிய வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் இந்த வைரமானது, 530.2 காரட் கொண்ட நீர் துளி வடிவிலானது. இதை ஆட்சியாளர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். பின்னர் இந்த வைரம், அரச குடும்பத்தினரின் செங்கோலில் பதிக்கப்பட்டது. இந்த வைரத்தின் உண்மையான பணமதிப்பு தெளிவாக தெரிய வரவில்லை. எனினும், அரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைரம் அதிக பணமதிப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது ராணி எலிசபெத்2 மறைவைத் தொடர்ந்து, அவரிடம் உள்ள வைரங்களை திரும்பதரக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ராணியின் செங்கோலில் இடம்பெற்றுள்ள கல்லினன் வைரம் தங்களுக்கு சொந்தம் என்றும் அதனை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படியும் தென்ஆப்பிரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.
பிரிட்டனால் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்கம், வைரங்கள் ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இங்கிலாந்து குடும்பத்தின் கைவசம் உள்ள தங்களது நாட்டுக்கு உரிய பல்வேறு வைரங்களை திருப்பி ஒப்படைக்கும்படி கோரி பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.
அதுபோல இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு, ராணியின் மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைர்த்தையும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோஹினூர் வைரம்: ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போதைய தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள ஒரு இந்து கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது. மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) அதை கொள்ளையடித்தார் என்றும், அதன்பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப்சிங் ஆட்சியின் போது 1849ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுவது உண்டு. அதேபோல் தான் எகிப்திலும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட ரோசட்டா ஸ்டோனை மீட்டெடுக்க வேண்டும் என்ற பல காலமாக பலரும் கோரி வருகின்றனர். இது எகிப்திலிருந்து பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். அங்கிருந்து 1800களில் பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.