எடப்பாடி பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி அனுப்பிய திடீர் பரிசு!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அண்ணா எழுதிய ஐந்து புத்தகங்களை அனுப்பியுள்ளார்.

இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைத்தளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள்களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன்.

ஆதலால் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க!! என்று தினந்தோறும் கூறி, ஆட்சி நடத்திய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடிய நீங்களும், உங்கள் சகாக்களும், அண்ணா என்ன சொன்னார்? அண்ணா என்ன பேசினார்? அண்ணா என்ன எழுதினார்? அண்ணா எதைக் கடைப்பிடித்தார்? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குப் பின் கருத்துகளை தெரிவியுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், என்றெல்லாம் பதவியை வைத்துக்கொண்டு, சுயநலமாக செயலபட்டுக் கொண்டிருக்காதீர்கள். வெட்கப்பட்டுத் தலைகுனியக் கூடிய ஒரு நிலைமையை, திராவிடம் என்ற பெயருக்கும், அறிஞர் அண்ணா என்ற பெயருக்கு உருவாக்கி இருக்கிறீர்கள்.

இத்துடன் அறிஞர் அண்ணா எழுதிய ஐந்து புத்தகங்களை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். இதை நீங்களும் உங்களது முப்பத்து மூன்று முன்னாள் அமைச்சர்களும் அமர்ந்து படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். படிப்பதற்கு முடியாவிட்டால் யாரையாவது படிக்கச் சொல்லி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சுப வீரபாண்டியன், திராவிட கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி போன்றோரை அழைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவிலோ அல்லது பொதுக்குழுவிலோ தயவு செய்து அவர்களிடம் திராவிடம் என்றால் என்ன? அறிஞர் அண்ணா எதற்காக இந்த கட்சியை உருவாக்கினார்? என்றெல்லாம் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு பேசுங்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பா.ஜ.க விற்கு அடிமையாக இருப்பதையும், அண்ணாமலைக்கு அடிமையாக இருப்பதையும், விட்டுவிட்டு நல்ல அரசியலைக் கையில் எடுங்கள். அப்படி இன்றி அண்ணா கூறியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதானால், தயவு செய்து கட்சி பெயரை அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அங்கே இருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.