வெந்து தணிந்தது காடு படம் வெற்றியடைந்திருப்பதற்கு நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்தது படக்குழு. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, நீரஜ் மாதவ், ஒளிப்பதிவாளர் சித்தார்தா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோரா கலந்து கொண்டனர்.
நடிகரும் பாடகருமான நீரஜ் மாதவ் பேசுகையில், “இது என் முதல் தமிழ்படம். தமிழ் சினிமாவுக்கு நான் புதிது. ஆனால் சென்னைக்கு புதிது இல்லை. நான் படித்தது எஸ் ஆர் எம் கல்லூரியில் தான். இங்கே பார்த்த படங்கள்தான் சினிமா மேல் காதலை உண்டாக்கியது. கௌதம் சாரின் `விண்ணைத்தாண்டி வருவாயா’ ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் ஃப்ரெஷ் ஃபேஸ் என்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதற்கு எனக்கு பரிசளிக்க சிம்பு அண்ணாதான் வந்தார். இப்போது அவருடன் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறேன்.
ரஹ்மான் சாரின் பாடல்கள் கேட்டு வளர்ந்தவன் நான். படத்தில் ஒரு ராப் பாடல் வருகிறது. ஆனால் தமிழில் இல்லாமல் மலையாளத்தில் தான் வேண்டும் என சொன்னார் ரஹ்மான் சார். அதை என்னைப் பாட சொன்னார். இப்போது அந்தப் பாடல் படத்தின் முக்கியமான இரண்டு இடங்களில் வருகிறது. சீக்கிரம் அந்தப் பாடலை வெளியிடுவார்கள் என நினைக்கிறேன்”
நடிகர் சிம்பு பேசுகையில், “இந்தப் படத்தை ஒரு பரிசோதனை முயற்சியாக தான் தொடங்கினோம். எப்படி வரும் எனத் துவங்கியபோது தெரியவில்லை. காரணம் ஒரு கமர்ஷியல் படங்களுக்கு உண்டான எந்த விஷயமும் இல்லை. ஆனால் கௌதம் சொன்ன கதை மிக சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் நடிக்க ஆரம்பித்தேன். இன்று வெற்றியடைந்தது மகிழ்ச்சி. அதுமட்டுமில்லை முதல் முறையாக என்னுடைய படத்திற்கு கேடிஎம் ரிலீஸூக்கு முதல் நாளே கொடுத்துவிட்டார்கள். என்னாலேயே இதை நம்ப முடியவில்லை.
கௌதமுடன் இது மூன்றாவது படம். எல்லோரும் எனது நடிப்பையும், உடல் குறைத்ததையும் பற்றி கூறினார்கள். ஆனால், என்னை வெச்சு செய்தது எனக்குத்தான் தெரியும். படத்தில் நிறைய சிங்கிள் ஷாட் எடுத்தார்கள். ஆனால் அது நிறைய பேருக்கு படம் பார்க்கும் போது தெரியவே இல்லை. அதனால் அந்த காட்சிகளின் மேக்கிங்கை ரிலீஸ் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்புக்கு பாராட்டு கிடைப்பது மகிழ்வாக இருக்கிறது. அது சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது.
ரஹ்மான் சாரின் இசை பற்றி சொல்ல வேண்டும். மறக்குமா நெஞ்சம் பாடல் ஹிட் என கேட்கும் போதே தெரியும். ஆனால் படத்தில் என்னுடைய ஃபேவரைட் மல்லிப்பூ தான். பாடலை ஷூட்டிங்கில் கேட்ட போது கண்டிப்பாக தியேட்டரில் என்ஜாய் பண்ணுவார்கள் என கௌதமிடம் சொன்னேன். அது நடந்திருக்கிறது. படத்திற்கு பின்னணி இசையையும் அட்டகாசமாக கொடுத்தார் ரஹ்மான், கிட்டத்தட்ட ஒரு புது இசையமைப்பாளர் முதல் படத்துக்கு வேலை செய்தது போல சிரத்தையுன் செய்தார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தாவை பாராட்டுகிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட்டே இருக்காது. சரி இனிமேல் தான் வைப்பார்கள் போல என நினைத்து, லைட் செட் செய்த பின் கூப்பிடுங்கள் என சொல்வேன். இதுதான் சார் லைட்டு எனக் கூறுவார். எதாவது வருமா? எனக் கேட்பேன். படமாக பார்த்தபோது தான் அவரின் உழைப்பு புரிந்தது. ரஹ்மான் சார் படத்தில் ஒரு மலையாள ராப் பாடல் வருகிறது என போட்டுக்காட்டினார். கேட்டதும் மிரண்டு போனேன். அது நீரஜ் பாடியது எனத் தெரியாது. மிக சிறப்பாக இருந்தது, அவருடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. பார்ட் 2 பற்றி கேட்கிறார்கள். கதையை தயார் செய்யட்டும், நானும் காத்திருக்கிறேன்.
எல்லோரும் இந்த பாகத்தையே கேங்க்ஸ்டர் படம் எனக் கூறுகிறார்கள். ஆனால் இது கேங்க்ஸ்டர் ஆவதைப் பற்றிய படம். இரண்டாம் பாகம் தான் கேங்க்ஸ்டர் படம். அந்த பாகத்திலாவது, ரசிகர்கள் தியேட்டரில் கத்தி ரசிக்கும் படியான விஷயங்களை சேர்க்க சொல்லி கௌதமிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நான் உடம்பு குறைத்து விட்டதால், என்னை உருவகேலி செய்து இந்தமுறை விமர்சனம் எழுத முடியவில்லை. இது யாரைப் பற்றி சொல்கிறேன் என அவருக்கே தெரியும். இங்கே தட்டிவிட நிறைய பேர் உண்டு. ஆனால் தட்டிக் கொடுக்க தான் ஆட்கள் குறைவு. அப்படி என்னைத் தட்டிக் கொடுத்ததற்கு நன்றி” என்றார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். அதிலேயே இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்தற்கு கௌதம் மேனனுக்கு நன்றி. சிம்பு சாரும் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தால் தான் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.