ஜோத்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவர், தெரு நாய் ஒன்றை தனது காரில் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ காண்போரின் மனதை பதைபதைக்க வைப்பதாக உள்ளது.
எவ்வளவு படித்திருந்தாலும் விலங்குகள் மீது வன்மத்தை கொட்டும் மனிதர்கள் இந்த சமூகத்தில் இருக்கதான் செய்கிறார்கள். அந்த விலங்கால் தனக்கு எந்த ஆபத்தும், தொந்தரவும் இல்லாத போதிலும் அதனை துன்புறுத்தி ரசிக்கும் மோசமான மனநிலை அவர்களுக்கு இருக்கும்
குரங்குகளுக்கு உணவில் மிளகாய் பொடியை கலந்த கொடுத்து அது படும் பாட்டை கண்டு ரசிப்பது; நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுப்பது போன்ற செயல்களில் சில குரூர எண்ணம் கொண்ட மனிதர்கள் ஈடுபட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
ராஜஸ்தான் மருத்துவர்
இதுபோல விலங்குகளை துன்புறுத்துவது ஒருவித மனநோய் என மருத்துவம் கூறுகிறது. அந்த வகையில், ராஜஸ்தானில் மெத்த படித்த மருத்துவர் ஒருவரே, ஒரு தெரு நாயை சித்ரவதை செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் டாக்டர் ரஜ்னீஷ் க்வாலா (37). அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது வீடு அமைந்திருக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய் ஒன்று உலவி வந்துள்ளது. இதுவரை அந்த தெரு நாயால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லை எனக் கூறப்படுகிறது. யாராவது மீத உணவை வைத்தால் அதை சாப்பிடுவதை இந்த தெரு நாய் வழக்கமாக கொண்டிருக்கிறது.
நாயை வெறுத்த மருத்துவர்
ஆனால், ஆரம்பம் முதலாகவே மருத்துவர் ரஜ்னீஷ் க்வாலாவுக்கு இந்த நாயை பார்த்தாலே சுத்தமாக பிடிக்கவில்லை. பணிக்கு சென்று வரும் போது, அந்த நாயை அவர் கல்லால் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
மேலும், கடந்த வாரம் ஜோத்பூர் நகராட்சியை தொடர்பு கொண்ட ரஜ்னீஷ், அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கிறார். அதன்படி, அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் தெரு நாயை பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஏன் அந்த நாயை பிடித்து செல்கிறீர்கள். நாயால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. மேலும் இந்தப் பகுதிக்கு அது பாதுகாப்பாக இருக்கிறது எனக் கூறியுள்ளனர்.
காரில் நாயை கட்டி..
இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அந்த நாயின் மீது கோபத்தில் இருந்த ரஜ்னீஷ், அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டார். அதன்படி, நேற்று காலை பணிக்கு செல்லும் போது அந்த நாயை தனது காரின் முன் கண்ணாடியில் பெரிய கயிறை கொண்டு கட்டினார்.
பின்னர் அவர் காரை ஓட்டிச் சென்றார். இதில் அந்த நாய் காரின் பின்னால் ஓடியது. ஒருகட்டத்தில் காரின் வேகம் அதிகரித்ததால் அந்த நாயால் ஓட முடியவில்லை. இதனால் சில கிலோமீட்டர் தூரம் சாலையில் அந்த நாய் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர் ஓட முடியாமல் காரின் பின்னால் அந்த நாய் பரிதாபமாக ஓடியது.
வழக்கு பதிவு
இந்நிலையில், இந்த காட்சியை காரின் பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர், அந்த காரின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி, மருத்துவர் ரஜ்னீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அந்த நாயை கயிற்றில் இருந்து விடுவித்தார்.
காரில் பல கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதால் அந்த நாயால் நகர முடியாமல் அப்படியே படுத்துவிட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்த நாயை மீட்டு அங்குள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை பரிசோதித் மருத்துவர், அந்த நாய்க்கு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் மருத்துவர் ரஜ்னீஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.