காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சார்பில், ராகுல்காந்தியை மீண்டும் தலைவர் ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சோனியா காந்தி இருந்து வரும் நிலையில், கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 24 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடும்போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா காந்தியே ஏற்று கட்சியை வழி நடத்தி வருகிறார்.
ஆனால், அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் சோனியா காந்தியால் கட்சிக்கு முழு நேர பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகத்தான் இம்முறை புதிய தலைவர் தேர்தல் என்பது தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் இந்த தேர்தலில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிதரூர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் சசி தரூர். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தான் தேர்வாவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக செய்தியாளரிடம் தெரிவித்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் அதே நேரத்தில் தற்போது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி தான் மீண்டும் ஏற்க வேண்டும் என காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இன்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மேலும் சத்தீஸ்கர், புதுச்சேரி, குஜராத் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் கட்சியும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்த தீர்மானம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநிலம் முதல்வருமான பூபேஷ் பாகல் கூறுகையில், ஒவ்வொரு மாநில காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றினால் ராகுல் காந்தி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ராகுல் காந்தியோ நிச்சயமாக தான் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை உள்ளிட்டவைகளை காங்கிரஸ் தொழில்நுட்பக்குழு தயார் செய்திருக்கக்கூடிய நிலையில் அவற்றை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறது. கட்சிக்கு தேர்தலை அறிவித்துவிட்டு காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மட்டுமே தேர்வாக வேண்டுமென ஒருபுறம் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி வருவது அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் திட்டமிட்டபடி காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுமா? அல்லது காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வது என்பது அவசியம் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்.
– விக்னேஷ்முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM