வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 705 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். காய்ச்சல் பரவாமல் தவிர்க்க, தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்; முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரியில் பருவநிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை குழந்தை சிகிச்சை பிரிவில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன.
வைரஸ் காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
காய்ச்சல் அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி, 192 குழந்தைகள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டடு, சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 705 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றனர்.இது குறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 270 குழந்தைகள், காரைக்கால் அரசு மருத்துவ மனையில் 15 குழந்தைகள் என, மொத்தம் 285 குழந்தைகள் நேற்று முன்தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 410 குழந்தைகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 10 குழந்தைகள் என மொத்தம் 420 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 705 குழந்தைகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர்.ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சை வார்டில் கடந்த 16ம் தேதி வரை 155 குழந்தைகளும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மேலும் 42 குழந்தைகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் 197 குழந்தைகளும், காரைக்காலில் 20 குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜிவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவ மனையில் ஏற்கனவே 120 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக இரண்டு வார்டுகளை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க திறந்துள்ளதால் படுக்கைகளின் எண்ணிக்கையை 160 ஆக உயர்த்தியுள்ளோம்.பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் படிப்படியாக காய்ச்சல் பரவல் குறையும்.பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். வீட்டில் இருந்தாலும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அப்போது தான் காய்ச்சல் பரவலை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement