இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
கனடா துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் மரணம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: ஈரானில் பெண்கள் ஹிஜாபை கழற்றி போராட்டம்… உலகச் செய்திகள்
மில்டனில் கடந்த திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சத்விந்தர் சிங், ஹாமில்டன் பொது மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அருகில் இருக்க இறந்தார் என்று ஹால்டன் பிராந்திய காவல் சேவை (HRPS) சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சத்விந்தர் சிங் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர், அவர் துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் எம்.கே ஆட்டோ ரிப்பேர்ஸில் பகுதிநேர வேலை செய்து கொண்டிருந்தார் என்று அந்த அறிக்கையில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், இந்த கொடூரமான சோகத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் HRPS இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறது” என்று அது கூறியது.
திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் டொராண்டோ போலீஸ் கான்ஸ்டபிள் ஆண்ட்ரூ ஹாங், 48, மற்றும் எம்கே ஆட்டோ ரிப்பேர்ஸ் வைத்திருக்கும் மெக்கானிக் ஷகீல் அஷ்ரஃப், 38 ஆகியோர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதான ஷான் பெட்ரி என அடையாளம் காணப்பட்டார். பின்னர் அவர் ஹாமில்டனில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இளம் பெண் மரணம் துரதிர்ஷ்டவசமானது – ஈரான் காவல்துறை
ஈரானிய போலீசார் திங்களன்று இளம் பெண் காவலில் இறந்தது ஒரு “துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்றும் அவர்கள் மீண்டும் இதைபோல் பார்க்க விரும்பவில்லை என்றும் ஒரு அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 வயதான மஹ்சா அமினி, கடந்த வாரம் தெஹ்ரானில் அறநெறிப் காவல்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோமாவில் விழுந்து இறந்தார், பாதுகாப்புப் படையினரால் பெண் தாக்கப்பட்டதை அறிந்து கோபமடைந்த ஈரானிய பெண்கள் நாடு முழுவதும் அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினர்.
காவலில் வைக்கப்பட்டிருந்த மற்ற பெண்களுடன் காத்திருந்த அமினிக்கு வார இறுதியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அமினியின் தந்தை ஞாயிற்றுக்கிழமை சீர்திருத்த ஆதரவு எம்டெடாட் செய்தி இணையதளத்திடம் தனது மகள் உடல் தகுதியுடன் இருந்ததாகவும், உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இங்கிலாந்தில் இந்து கோவிலில் காவி கொடி கிழிப்பு; இரு பிரிவு இடையே வன்முறை
இங்கிலாந்து, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர்.
இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, லீசெஸ்டர்ஷைர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, அப்பகுதியில் இந்து மற்றும் முஸ்லீம் குழுக்களுக்கு இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்தது. இதுவரை, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil