மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி, கனியாமூரில் ஜூலை 17ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. மாணவி படித்த பள்ளியான சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்த கலவரக்காரர்கள், கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கினர். இந்த கலவர சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால், இதுவரை யாரும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பள்ளி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பள்ளியில் கட்டிட மறுசீரமைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் 45 நாட்களுக்கு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கலவரம் நடந்து 67 நாட்களுக்குப் பிறகு கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.