நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல். இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியும் உள்ளது.
நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் இன்று (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சமூக விரோதிகள் தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அதேபோல இந்த சம்பவம் குறித்து நக்கீரன் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “திங்கட்கிழமை (செப்டம்பர் 19 ) மாலை சரியாக 5 மணியளவில், பள்ளியின் வெளிப்புறத்தை நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமரா மேன் படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். பின்னர், பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் போய்க்கொண்டிருந்த போது, நமது செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் சென்ற காரை சில நபர்கள் வழிமறித்துள்ளனர். ராயல் என்பீல்ட் கிளாசிக் பைக் உள்ளிட்ட 5 டூ வீலர்களில் வந்திருந்த நபர்கள், காரில் இருந்த அஜீத்தின் சட்டையைப் பிடித்து தாக்கியுள்ளனர். இதில், அஜீத்தின் சட்டை கிழிந்துள்ளது. காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். இந்த தாக்குதலில் செய்தியாளர் பிரகாஷின் தலை உடைக்கப்பட்டு, அஜீத்தின் பல் நொறுக்கப்பட்டது என நக்கீரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.