காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியில் மாற்றத்தை வலியுறுத்தும் தீவிர ஆதரவாளருமான சசி தரூர், அடுத்த மாதம் நடைபெற உள்ள உட்கட்சி தேர்தலில் கட்சித் தலைவர் (President) பதவிக்கு போட்டியிட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் (President) பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது. 2019 பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்து வருகிறார்.
ஆனால் தற்போது கட்சியின் “பாரத் ஜோடோ” யாத்திரையை முன்னெடுத்து வரும் ராகுல் காந்திக்கு, கட்சியின் முக்கியத் தலைவர்களில் பெரும் பகுதியினரின் ஆதரவு இன்னும் உள்ளது. அவர்கள் தேர்தலுக்கு முன் அவர் மனம் மாறுவார் என்று நம்புகிறார்கள். அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக சசி தரூர் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார். அதிருப்தியில் இருந்த ஜி-28 தலைவர்கள் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், நிறுவன மறுசீரமைப்பைக் கோரியிருந்தார்.
கடந்த வாரம், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் செயல்பாட்டில் “வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை” கோரிய தலைவர்களில் சசி தரூரும் இடம்பெற்றிருந்தார். வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அக்கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி, வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை முடிந்து நாடு திரும்பிய சிறிது நேரத்திலேயே அவரை சசி தரூர் சந்தித்து பேசினார். இந்நிலையில்தான் சசி தரூர், கட்சித் தலைவர் (President) பதவிக்கு போட்டியிட சோனியா காந்தியிடம் அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM