குடி போதையில் முதல்வர் பகவந்த் மான்? – விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டாரா?

குடி போதையில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் மீது, எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது.

இது குறித்து, அக்கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியதாவது:

விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார். லுப்தான்சா விமானத்தில் அதிக போதையில் நடக்க கூட முடியாமல் பகவந்த் இருந்துள்ளார் என சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இதனால், விமானம் 4 மணி நேரம் தாமதமாக சென்றது.

இதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் அதனை பகவந்த் தவற விட்டுள்ளார். இந்த செய்திகள், உலகம் முழுவதும் உள்ள பஞ்சாப் மாநில மக்களை அவமதிப்புக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் அமைதி காக்கும் பஞ்சாப் அரசு, இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்து தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேப் போல், காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பற்றி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என, ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங் கூறியதாவது: திட்டமிட்டபடி செப்டம்பர் 19 ஆம் தேதி பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் திரும்பினார். சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் சில முதலீடுகளை திறம்படப் முதலமைச்சர் பகவந்த் மான் பெறுவதால், எதிர்க்கட்சிகள் பொய் பிரசாம் செய்து வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, விமானங்களின் வருகையில் மாற்றம் ஏற்பட்டதால், அன்றைக்கு, விமானம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டதாக, லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.