போபால்: மத்திய பிரதேசத்தில் ஆண் நண்பருடன் கோவிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் வீடுகளையும் புல்டவுசரால் இடித்து தள்ளி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சில ஆண்டுகளாகவே நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர்.
இத்தைகைய செயலில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், இது போன்ற சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
16 வயது சிறுமி
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் நைகாரி பகுதியில் ஆண் நண்பருடன் கோவிலுக்கு சென்ற 16 வயது சிறுமியை 6 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களது வீடுகளை புல்டவுசரால் இடித்து தள்ளியது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
கோவிலுக்கு சென்ற சிறுமி
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் நைகாரி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பர் ஒருவருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த வழியில் அவர்களை பார்த்த சில இளைஞர்கள் திடீரென சிறுமியின் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த சிறுமியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் சேர்ந்து சிறுமியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்றுள்ளனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
பின்னர் அவர்கள் கூட்டாக சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என்றும் மீறி தெரிவித்தால் உன்னை கொன்று விடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதற்கிடையே சிறுமியின் நிலையை கண்டு அவர்களது பெற்றோர் கதறி அழுதனர். உடனே அவர்கள் சிறுமியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேரின் வீடுகள் இடிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 6 பேரில் 3 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டவுசரால் இடித்து தள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் வீடுகளும் புல்டவுசரால் இடித்து தள்ளப்பட்டது.
3 பேருக்கு வலைவீச்சு
மீதமுள்ள 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும்.. அவர்களது வீடுகளும் இதேபோல் புல்டவுசரால் இடித்து தள்ளப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் சகோதரிகளான 2 பட்டியல் இன சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு சொந்தமான வீடுகள், சொத்தினை புல்டவுசர் கொண்டு யோகி ஆதித்யநாத் அரசு சேதப்படுத்திய நிலையில் அதே பாணியை மத்திய பிரதேச அரசும் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.