லதா ரஜினிகாந்த் மீதான ‘கோச்சடையான்’ பட விவகாரத்தில், கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர், அபிர்சந்த் என்பவரிடமிருந்து சுமார் ரூ. 6.2 கோடி கடனாக பெற்றார். இதில் லதா ரஜினிகாந்த் உத்திரவாத கையப்பமிட்டு இருந்தார். ஆனால் முரளி அந்த பணத்தை திருப்பி செலுத்தாதையடுத்து அபிர்சந்த் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீசார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196 (போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது), 420 (மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது), 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, “குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம்” என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் தனக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை முழுமையாக ரத்து செய்ய கோரியும், லதா ரஜினிகாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், லதா ரஜினிகாந்த் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசு மற்றும் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.