மொகாலி: சண்டிகர் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகளின் வீடியோ வெளியானது தொடர்பாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் தலைமையில் 3 பேர் அடங்கிய மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என்று பஞ்சாப் டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “முதல்வர் பகவந்த் மான் உத்தரவின்படி, மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்ப்ரீத் தியோ தலைமையில் 3 நபர்கள் அடங்கிய அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு, சண்டிகர் பல்கலைக்கழக வீடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்கள் யாரும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம். சம்பந்தப்பட்வர்களின் கண்ணியம் மற்றும் தனிப்பட்ட உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதி வார்டர் ரவிந்தர் கவுரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், இதுவரை 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தத் தனியார் பல்கலை விடுதியில் தங்கிப் படிக்கும் எம்பிஏ முதலாமாண்டு மாணவி ஒருவர் 60 மாணவிகள் குளிக்கும்போது எடுத்த வீடியோகளை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவர் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், வீடியோ விவகாரம் குறித்து தெரிந்தும் உடனடியாக போலீஸிற்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த விடுதி வார்டன் ரவிந்தர் கவுரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும், வீடியோ விவகாரம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவி, சிம்லாவில் தங்கியிருந்த அவரது காதலன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்துத் கைது செய்யப்பட்டனர். மேலும், டிராவல் ஏஜென்சியில் வேலைபார்த்து வந்த 23 வயதான சன்னி மேதா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இவரது பங்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
போராட்டம் வாபஸ்: இதற்கிடையில், சனிக்கிழமை இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இந்த விவகாரத்தில் நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் உத்தரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை திங்கள்கிழமை (செப்.19) காலையில் விலக்கிக் கொண்டனர்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி நவ்ரீத் சிங் கூறும்போது, “மொகாலி பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவியின் செல்போனில் நான்கு வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அவை அனைத்தும் அந்த மாணவியின் காதலனுக்கு அனுப்பப்பட்ட அம்மாணவியின் வீடியோக்களே. அதேபோல போராட்டம் நடத்தும் மாணவர்கள் கூறியதுபோல் பல்கலை விடுதியில் தற்கொலை முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. மாணவி பகிர்ந்ததாக கூறப்படும் வீடியோகளை தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்தார். போலீஸாரின் இந்தக் கூற்றை மறுத்த போரட்டம் நடத்திய மாணவர்கள், தற்கொலை முயற்சியை பல்கலை நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது என்று குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றம்சாட்டப்பட்ட மாணவி தனது காதலனுக்கு எடுத்து அனுப்பிய அவரது வீடியோக்களைத் தவிர வேறு எந்த வீடியோக்களும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்படும் அனைத்து வதந்திகளும் பொய்யானவை ஆதாரமற்றவை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
On directions of CM @BhagwantMann a three-member all-women SIT to investigate #ChandigarhUniversity case, under the supervision of senior IPS officer Gurpreet Deo. (1/3) pic.twitter.com/0iIycg5Tqt
— DGP Punjab Police (@DGPPunjabPolice) September 19, 2022