சாலையோரம் துடித்த கர்ப்பிணி; பிரசவம் பார்த்த வேலூர் போலீஸ்! – பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திர பாபு

வேலூர் தெற்கு காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் இளவரசி, கடந்த 17-ம் தேதி அதிகாலை 2 மணிக்குப் பணியிலிருந்தார். அந்த சமயம், காவல் நிலையத்தின் எதிரே சாலையோரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற கர்ப்பிணி ஒருவர், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். சத்தம்கேட்டு அங்கு ஓடிச்சென்ற காவலர் இளவரசி, கர்ப்பிணியின் கையைப் பிடித்து தைரியமூட்டினார். கர்ப்பிணியின் அருகில் 6 வயதாகும் சிறுவன் ஒருவனும் செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றிருந்தான்.

பிரசவித்த குழந்தையுடன் காவலர் இளவரசி

இக்கட்டான நிலை என உணர்ந்த காவலர் இளவரசி தாமதிக்காமல், காவல் நிலையத்துக்குள் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், மற்றொரு பெண் காவலர் சாந்தியை உதவிக்கு அழைத்து, 108 ஆம்புலன்ஸை அழைக்குமாறு கூறியிருக்கிறார். அதற்குள் பிரசவ வலி அதிகமானதால், பெண் காவலர்களே அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில், அழகான பெண் குழந்தைப் பிறந்தது. இதையடுத்து, ஆதரவற்ற பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். அதோடு, ஆதரவற்ற அந்தப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தேவையான உடைகளையும், இதரப் பொருள்களையும் காவலர்களே வாங்கிக் கொடுத்தனர். விசாரணையில், அந்தப் பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அருகில் திகைத்துப்போய் நின்றிருந்த சிறுவன், அவரின் முதல் பிள்ளை என்பதும் தெரியவந்தது. இரண்டாவதாக கர்ப்பமடைந்த நிலையில், கணவன் கைவிட்டுச் சென்றதும், ‘கையில் ஒன்றும்; வயிற்றில் ஒன்றுமாக’ வேலூரில் யாசகம் பெற்று, பிழைப்பு நடத்தியதும் தெரியவந்தது.

காவலர்களைப் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு

இதையடுத்து, அந்தப் பெண்ணையும் அவரின் குழந்தைகளையும் பாதுகாப்பு இல்லத்தில் சேர்ப்பதற்கான உதவிகளையும் பெண் காவலர்களே செய்து வருகிறார்கள். வேலூர் தெற்கு காவல் நிலைய காவலர்களின் மனித நேயமிக்க இந்த நற்செயலை அறிந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், தலைமை பெண் காவலர் இளவரசி, மற்றொரு பெண் காவலர் சாந்தி மூவரையும் டி.ஜி.பி அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, பண வெகுமதி வழங்கி பாராட்டியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.