இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே டெல்லி, மேற்கு வங்கம், ஜார்கண்ட் என பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுங்கட்சி தலைவர்கள்மீது தொடர்ச்சியாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ரெய்டுகள் நடந்துவருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், “இது மத்தியில் ஆளும் பாஜக-வின் பழிவாங்கும் அரசியல்” என விமர்சனம் செய்துவருகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இதனை மோடி செய்யவில்லை என்று நம்புவதாக!” தற்போது தெரிவித்திருக்கிறார்.
சட்டசபையில் இன்று, மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு எதிரான தீர்மானத்துக்கு முந்தைய விவாதத்தின்போது பேசிய மம்தா, “அமலாக்க இயக்குநரகம் மற்றும் சி.பி.ஐ மீதான பயம் மற்றும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதால், தொழிலதிபர்கள் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள். ஆனால், மோடி இதைச் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். சி.பி.ஐ இனி பிரதமர் அலுவலகத்துக்குப் புகாரளிக்காது என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. மேலும், அது உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கிறது. சில பா.ஜ.க தலைவர்கள் சதி செய்கிறார்கள், அவர்கள் அடிக்கடி நிஜாம் அரண்மனைக்குச் செல்கிறார்கள்.
நான் பிரதமருக்கு உரிய மரியாதையுடன் ஆலோசனை கூறுகிறேன். வங்காளத்துக்கான நிதியை நிறுத்துமாறு அவர்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், சிறுத்தைகளிடம் வாங்குவதை நிறுத்துமாறு அவர்கள் ஏன் உங்களுக்கு அறிவுறுத்தவில்லை? அதேசமயம், கட்சியையும் ஆட்சியையும் ஒன்றாக கலக்க வேண்டாம் என்று நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்” என்று கூறினார்.
இதற்கிடையில் பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரி, “பிரதமர் மோடியைப் புகழ்வதன் மூலம், அவர் தன்னுடைய மருமகனைக் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.