'சிபிஐ ரெய்டுக்கும், மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' – மம்தா பானர்ஜி பரபரப்பு கருத்து!

“சிபிஐ ரெய்டுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான பார்த்தா சாட்டர்ஜி, அனுப்ரதா மண்டல் ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் மேற்கு வங்க மாநிலத்தில் எல்லை மீறி பயன்படுத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 189 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்தத் தீர்மானத்தின் விவாதத்தின் போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மத்திய பாஜக அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த தீர்மானம் தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டு நிறைவேற்றப்படவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளின் பாரபட்சமான அணுகுமுறையை கண்டித்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சிபிஐ, அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்படுவதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக கருதவில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் பிரதமர் அலுவலகத்தின் கீழ் வராது. அது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும். அதனால், இதன் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக நினைக்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள், தங்களது சுய நலத்திற்காக சதி செய்கின்றனர். மத்திய அரசின் நடவடிக்கைகளும் பாஜகவினரின் விருப்பங்களும் ஒன்றாக கலப்பதை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை எப்போதும் காட்டமாக விமர்சிக்கும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இவ்வாறு கருத்து தெரிவித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.