சென்னை மழைநீர் வடிகால் பணி 60% மட்டுமே நிறைவு; அக்.20-க்குள் சாலைகளை சீரமைக்க உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் பணிகளை 60 முதல் 70 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், சாலைப் பணிகளை அக்டோபர் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மட்டும்தான் 80 சதவீத அளவில் நிறைவடைந்துள்ளது. மற்ற திட்டப் பணிகளை 60 முதல் 70 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், திட்டப்பணிகள் முடிந்த இடத்தில் சாலைப்பணிகளை அக்.20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதில், மழைநீர் வடிகால்களை சுற்றி எந்த அளவு சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இதைத் தவிர்த்து கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் மேட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்த இடங்களில் உயர் குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகளும், குறைந்த அளவு குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகளும் என மொத்தம் 400 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் முழு விவரம்:

  • சுரங்கப் பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.
  • மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  • உபகரணங்களை முன் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • வடிகட்டி தொட்டிகளில் இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்லும் இணைப்பு குழாய்களில் அடைப்புகள் ஏதுமின்றி பராமரிக்க வேண்டும்.
  • நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் தங்கு தடை இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.