சேலத்தில் தனியார், உணவு தானிய சேமிப்பு கிடங்கில் இருந்து 12,500 கிலோ கலப்பட சீரகம், சோம்பு ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் கிரித்குமார் ராமன்லால் என்பவருக்குச் சொந்தமான உணவு தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் உணவு தானிய பொருட்களில் கலப்படம் செய்வதாக சேலம் மாவட்ட உணவு கலப்பட தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த சீரகம், சோம்பு உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் செய்து செயற்கையாக நிறமூட்டுவது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 8,250 கிலோ சீரகம், 4,180 கிலோ சோம்பு மற்றும் செயற்கை நிறமூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வேதிப் பொருட்கள் உலர்த்துவதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மாதிரிகள் ஆய்வு அனுப்பப்பட்டு அறிக்கை பெறப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM