மும்பை: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் பயணம் செய்த கார் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் சாரொட்டி கிராமத்துக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில், காரில் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கீர் பண்டோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், சைரஸ் மிஸ்திரியின் கார் விபத்துக்குள்ளான மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தானே கோத்பண்டர் மற்றும்பால்கர் மாவட்டம் தப்சாரிக்கு இடையிலான மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையின் 100 கி.மீ. சுற்றளவில் நடப்பு ஆண்டில் மட்டும் 262 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 62 பேர் உயிரிழந்தனர். 192 பேர் காயமடைந்தனர் என்று மகாராஷ்டிர தேசிய நெடுஞ்சாலை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிவேகம், ஓட்டுநரின் கவனக் குறைவு ஆகியவை இதுபோன்ற விபத்துகளுக்கு பொதுவானகாரணங்களாக கூறப்படுகின்றன. இருப்பினும், மோசமான சாலை பராமரிப்பு, முறையான சிக்னல் வசதி இல்லாமை, வேகத்தடைகள் அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சாலை பராமரிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த பகுதிகளில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி, ஒவ்வொரு 30 கி.மீ.க்கும்ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் கிரேன் மற்றும் ரோந்து வாகனங்களும் இருக்கவேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் பல இடங்களில் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.
செப். 4-ம் தேதி ஏற்பட்ட சைரஸ் மிஸ்திரியின் விபத்துக்குப் பிறகு, பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக நிபுணர்களின் கருத்தை அறிய மகாராஷ்டிர காவல் துறை மத்திய சாலை ஆராய்ச்சி மையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.