டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ் ; 3 நாள்கள் முகாம் – திடீர் பயணத்திற்கு என்ன காரணம்?

அதிமுக தலைமை பிரச்சனையை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பு ரத்துசெய்யப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார்.  

இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என தனி நீதிபிதி தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில், தனி நிதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தற்போது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கிலும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் எடப்பாடி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியானது. மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தலைமை அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. 

மூன்று நாள்கள் முகாம் 

அந்த வகையில், அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையத்தில் கட்சி விவகாரம் தொடர்பாக முறையிட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தில், அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அவர்கள் மூன்று நாள்களுக்கு முகாமிட இருப்பதாகவும், அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் என்பதை அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இம்முறையாவது நேரம் ஒதுக்கப்படுமா?

பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, சென்னை வந்தபோது, அவரை எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் சென்று வரவேற்றிருந்தார். அதற்கு முன்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வழியனுப்புதல் விழாவிற்கு சென்றிருந்த இபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கிடைக்காததால், குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல், பயணத்தை பாதிலேயே முடித்துக்கொண்டு சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.