சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் 15ம் தேதி வெளியானது.
சைக்கோ திரில்லர் பின்னணியில் மிரட்டலாக உருவாகியிருந்த நானே வருவேன் டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நானே வருவேன் செப்டம்பரில் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நானே வருவேன் ரிலீஸ் தேதி?
தனுஷின் ‘நானே வருவேன்’ படம் செப்டம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்தில், தனுஷ் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் படம் பற்றி பாசிட்டிவான வைப் தெரிகிறது. இந்தப் படம் வரும் 29ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலீஸுக்கு முன்பே சம்பவம் ஆரம்பம்
‘நானே வருவேன்’ டீசரை பார்த்த ரசிகர்கள் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் தரமாக இருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். வாலி, காதல் கொண்டேன் ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நானே வருவேன் படம் ரிலீஸாகும் முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் மொத்தமே 35 கோடி தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது இப்போது ஓடிடி ரைட்ஸ், தொலைக்காட்சி உரிமையிலேயே கிடைத்துவிட்டதாக தெரிகிறது.
அமேசானிடம் ஓடிடி உரிமை
சமீபத்தில் ரொம்பவே குறைந்த பட்ஜெட்டில் உருவான தனுஷ் படம் இதுவாக தான் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப இந்த பிசினஸ் நடத்திருக்கலாம் என தெரிகிறது. அதேபோல், தொலைக்காட்சி உரிமையை சன் டிவி 18 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், படத்தின் பட்ஜெட்டுக்கு இப்பவே லாபம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் நானே வருவேன் படக்குழுவினர் உள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்குமா?
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததால், நானே வருவேனும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நானே வருவேன் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும், அது பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்யுமா என்ற சந்தேகமும் காணப்படுகிறது. இந்நிலையில், படத்திற்கு சென்சாரில் யு/ஏ சர்ஃடிபிகேட் கிடைத்துள்ளதாகவும், 2 மணி 15 நிமிடம் ரன்னிங் டைம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.