சென்னை: தமிழகத்தில் அக்டோபர் முதல் அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமையிலும், பள்ளிகளில் வியாழக்கிழமையிலும் கரோனா உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள் போடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. சென்னை தியாகராய நகர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 96.50 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 91.10 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தவணை தடுப்பூசி 4.25 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 80,705 பேருக்கு போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடருமா என்பது சில நாட்களில் தெரியும்.
தடுப்பூசி போடுவதில் அக்டோபர் மாதம் முதல் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, புதன்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரை 11,333 இடங்களிலும், வியாழன்தோறும் பள்ளிகளிலும் கரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. இந்த முகாம்களில் கர்ப்பிணிகள், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
1,044 பேர் பாதிப்பு
எச்1 என்1 இன்புளுயன்சா காய்ச்சல் என்பது பருவகாலங்களில் வழக்கமாக வரக்கூடியது. தமிழகம் முழுவதும் இதுவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை1,044 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். அதற்காக, பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் இல்லை. அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அறிக்கைகளால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர்.
37-வது மெகா தடுப்பூசி முகாம்
இந்தியாவில் கரோனா பரவல்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 தவணை தடுப்பூசிபோட்டு, 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதற்காக மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 36 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 37-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடந்தது.
8.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும்அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழகம் முழுவதும் நடந்த மெகா முகாமில் 8.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இன்று விடுமுறை
தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதனால், இன்று வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.