இன்புளூயன்ஸா காய்ச்சல் பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
காலாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்து பேசியுள்ளார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
“இதுவரை சுமார் 1044 நபர்களுக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டதில், தற்போது 364 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் படியும் அறிவுரை வழங்கினார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை” என கூறியுள்ளார்.
எனவே காலாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று (18.09.2022) நடைபெற்ற 37ஆவது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 8.17 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற 36 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 35 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
இதுவரை (18-09-2022) 12-14 வயதுடைய 19,86,409 (93.65%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 15,66,176 (73.84%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15-17 வயதுடைய 30,53,610 (91.26%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,95,960 (77.58%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக மொத்தம் 86,06,640 (20.20%) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று (18-09-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 8,17,276 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 28,285 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,83,073 பயனாளிகளுக்கும் மற்றும் 6,05,918 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.54% முதல் தவணையாகவும் 91.37% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 133க்குட்பட்ட தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகம், உஸ்மான் ரோடு, தி.நகர் பேருந்து நிலையம் அருகில், அமைக்கப்பட்ட சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து கூறுகையில் வரும் 25-09-2022 அன்று 38வது சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 292 அரசு மருத்துவமனைகள் மற்றும் 42 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய 11,333 மையங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு 11 வகையான தடுப்பூசிகள் (13 ஆன்டிஜென்) பிரதி வாரம் புதன்கிழமை தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் அறிவிப்பின் படி 18-59 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை இலவசமாக வழங்குவது செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதால், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கூறிய 11,333 மையங்களில் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுடன் இணைந்து கோவிட் தடுப்பூசி தவணைகளும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், 12-17 வயதுடைய மாணவர்களில் இரண்டாம் தவணை பெற வேண்டியவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பிரதி வாரம் வியாழக்கிழமை அன்று சிறப்பு முகாமினை அமைத்து கோவிட் தடுப்பூசி தவணைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.