தலைமை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்: விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

தமிழகத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தலைமை அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக் கருவிகளுடன்கூடிய காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு போதிய படுக்கை இல்லை. பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது. மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லை, ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் இல்லை என செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.‌

இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதை விடுத்து, என்ன மாதிரியான தேவைகள் இருக்கிறதோ அதை செய்ய வேண்டும். மக்களின் நலம், குழந்தைகளின் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில்கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்கறையுடன் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

காய்ச்சல் பரவுவதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. பன்றி காய்ச்சல், டெங்கு, இன்ஃபுளூயன்சா உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் பாதித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 8 ஆண்டு காலத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 30 ஆயிரம் செவிலியர்கள், மருத்துவர்கள் வெளிப்படையாக நியமனம் செய்யப்பட்டார்கள். அதே வேகத்தில் தற்போது பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், தலைமை மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு என காய்ச்சல் வார்டுகளை உடனடியாக அமைத்து, அங்கு 24 மணிநேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதே வார்டுகளில் ரத்த மாதிரிகளை உடனடியாக எடுத்து பரிசோதனை செய்யக்கூடிய கருவிகளையும் வைக்க வேண்டும். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணிநேரத்தில் என்ன மாதிரியான காய்ச்சல் வந்துள்ளது என்பதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மாதிரியான காய்ச்சல் பரவுகிறது, எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.