தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிராம பஞ்சாயத்துகளில் 5 நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்வி குழு என்பது ஓர் அங்கமாக உள்ளது. இந்த கல்வி குழுவில் பள்ளி வளர்ச்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே நேரம், பள்ளி மேலாண்மை குழுக்களும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தில் கல்விக்குழு பங்கேற்பது தொடர்பான முக்கிய அறிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அந்த கூட்டத்தில், பள்ளி வளர்ச்சி, கட்டமைப்பு, மாணவர்கள் சேர்க்கை, ஆலோசனை, தற்போது கற்றல் பணிகள், மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொகுத்து கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்களுடன், பள்ளி வளர்ச்சிக்கு தொடர்பான ஆலோசனையை கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து உரிய ஆலோசனையை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமின்றி கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சமர்ப்பிக்கும் தீர்மானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை இந்த மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் எஸ்.எம்.சி ( பள்ளி மேலாண்மைக்குழு ) கூட்டத்தில் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.