சிக்கபள்ளாப்பூர்: கர்நாடகாவில் திருமணமாகி 5 ஆண்டாகியும் குழந்தை பிறக்காததால் மனமுடைந்த தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த சலகுண்டே கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்திர சேகர் (32), சசிகலா (23) ஆகியோருக்கு திருமணமான 5 வருடங்கள் ஆகிறது. இன்னும் இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இதனால் மனம் விரக்தி அடைந்த நிலையில் இருந்த தம்பதியினர், நேற்று அவர்களது வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘திருமணமாகி 5 ஆண்டாகியும் குழந்தை இல்லாததால், தம்பதியினர் வீட்டின் மேற்கூரையில் ஒரே சேலையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சேலையின் ஒரு பக்கத்தில் மனைவியும், மற்றொரு பக்கத்தில் கணவனும் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கைப்பற்றப்பட்டது. எனினும், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.