பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜனதா சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திடீரென வேட்டியை மடித்து கட்டி, களத்தில் இறங்கி கபடியும் ஆடினார். மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பனுடன் மல்லுக்கட்டினார். இது அங்கிருந்த பாஜவினர் அனைவரையும் உற்சாகமடைய செய்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ”இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். தி.மு.க. ஆட்சியில் சாலைகள் சரிவர போடப்படுவது கிடையாது.
பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை திசை திருப்புவதற்காக தான் ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் தூண்டி விடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெரியார் வழிக்கு பிரதமர் மோடி வந்தால் வரவேற்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது.
மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கும் திட்டங்களைத் தவிர, வேறு எந்த திட்டங்களும் தமிழகத்தில் நடைபெறவில்லை. வக்பு வாரிய சட்டத்தை வைத்துக்கொண்டு தற்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஒரு இன்ச் இடத்தை கூட அவர்களுக்கு வழங்க பாஜக அனுமதி அளிக்காது. திமுக அத்தியாயம் என்பது ஸ்டாலினோடு முடிவடைகிறது. சின்னவர் என்பவர் திமுகவை வழிநடத்த மாட்டார்” என்றார்.