கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான தொடர் `இது சொல்ல மறந்த கதை’. இந்தத் தொடரில் `சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நாயகியாக கமிட் ஆனார். விஜய் டிவியில் `நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரிலிருந்து அவர் விலகிய பிறகு இந்தத் தொடரில்தான் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது இந்தத் தொடர் விரைவிலேயே முடிவடையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,
“‘இது சொல்ல மறந்த கதை’ தொடரின் ‘சாதனா’ கதாபாத்திரம் இப்படியாக முடிவடையும் என நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் கலர்ஸ் தமிழ்… நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக வாழ்த்துகள்!
நாங்கள் உங்களுடைய ஃபேக் புரொமோஷனிலிருந்தாவது இனிமேல் ஃப்ரீயாக இருக்கலாம். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை.
இந்த புராஜக்ட் செலக்ட் பண்ணாதீங்கன்னு சொல்லி என்னைப் பார்த்து சிரித்த எல்லாரையும் திட்டி இதில் கமிட்டானேன். இன்றைக்கு கலர்ஸ் தமிழ் மக்கள் நான்தான் தப்பான முடிவெடுத்திருக்கேன்னு நிரூபிச்சிட்டீங்க… இதற்காக வெட்கப்படுறேன்!
சீரியலை ஜஸ்ட் லைக் தட் ஆக முடித்ததற்கு வெட்கப்படுறேன். தயவுசெய்து உங்களுடைய குறைகளை நடிகர்கள் மீது போடாதீர்கள். நீங்க பண்ண வரைக்குமே போதும்! நல்லா இருங்க! இப்ப முடிஞ்சிருக்கவே அவசியமில்லாத தொடரை நீங்க வெற்றிகரமா முடிச்சு வைச்சிட்டீங்க… அதனால உங்களுக்கு பாராட்டுகள்!
எல்லாத்தையும் தாண்டி சாதனாவை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். இந்த கார்ப்பரேட் உலகத்தில் யாராலும் நிலைத்திருக்க முடியாது… குட் பை சாதனா!” எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து கலர்ஸ் தமிழ் சேனல் தரப்பிலிருந்து இன்னும் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.