காங்கிரஸ் கட்சியை பலத்தப்படுத்தும் நோக்கிலும், மத்திய பாஜக அரசின் அவலங்களாக காங்கிரஸ் கருதும் விஷயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வரை 150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாத யாத்திரையில் மொத்தம் 12 மாநிலங்களில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
கடந்த 8 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல், தற்போது கேரள மாநிலத்தில் 18 நாட்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
தமது இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக இன்று ஆலப்புழாவுக்கு சென்ற அவர், ஓணம் பண்டிகையையொட்டி அங்குள்ள புன்னமடா ஏரியில் பாரம்பரியமாக நடத்தப்படும் பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்று துடிப்புகளை வீசினார். பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்துடன் போட்டியில் ராகுல் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
‘நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இணக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை’ என்ற வரிகளுடன் இந்த வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் பகிர்ந்துள்ளார்.
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்யவே, காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஒற்றுமையை யாத்திரையை மேற்கொண்டுள்ளார் ராகுல்.