‘ராட்சசன்’, ‘தெறி’, ‘துப்பறிவாளன்’ உட்படச் சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்த தீபா என்கிற பவுலின் ஜெசிகா, நாசர் நடித்த ‘வாய்தா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நேற்று முன்தினம் காதல் தோல்வியால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது காதலன் சிராஜிதீனை இப்போது காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல்.
இந்நிலையில் ‘வாய்தா’ படத்தின் இயக்குநரான மகிழ்வர்மன் சி.எஸ்.சிடம் கேட்டேன்.
“‘வாய்தா’ படத்துல கதாநாயகிக்கு சின்ன ரோல்தான். ஆனா, திருப்புமுனையான கேரக்டர். ஸோ, நாங்க ஹீரோயின் தேடிட்டு இருக்கும்போது நண்பர்கள் மூலம், ஜெசிகாவை ரெஃபர் பண்ணினாங்க. அதன்பிறகு அவங்களை நேர்ல வரச்சொல்லி ஆடிஷன் வச்சு செலக்ட் பண்ணினோம். படத்துல அவங்க கதாபாத்திரத்தின் பெயர் கவிதா.
தர்மபுரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. வழக்கமா ஹீரோயின்கள் ஷூட்டிங் வரும்போது துணைக்கு அவங்களோட அம்மாவையோ, அப்பாவையோ அழைச்சிட்டு வருவாங்க. ஆனா, ஜெசிகா தனியாகத்தான் வந்தாங்க. ரொம்பவே தைரியமான பெண்ணாகத்தான் இருந்தாங்க. அவங்க ரோலை புரிஞ்சுக்கிட்டு டேக் அதிகம் வாங்காமல் நடிச்சிடுவாங்க. திறமைமிக்க நடிகையாகவும் இருந்தாங்க.
அவங்க பூர்வீகம் ஆந்திரா என்றும், தமிழ்நாடு – ஆந்திரா எல்லையிலுள்ள ஒரு ஊர்லதான் அவங்க அம்மா, அப்பா இருக்கறதாகவும் அப்ப சொன்னாங்க. வேற எந்த விவரமும் அவங்கச் சொன்னதில்லை. படத்துல அவங்களுக்குக் காதல் தோல்வி ஆகிடும். ஆனா, அந்த தோல்வியைக் கண்டு வருந்தாமல், ரொம்பவே மெச்சூரிட்டியா அதை ஏத்துக்கிட்டு அடுத்தக் கட்டத்துக்கு போற மாதிரியான கதாபாத்திரம் அது. அப்படி ஒரு ரோல் பண்ணின பெண், நிஜத்துல காதல் தோல்வியால் தற்கொலை செஞ்சது எனக்கு அதிர்ச்சியா இருக்கு.
மீடியாக்கள்ல பார்த்துதான் நானே செய்தியை தெரிஞ்சுக்கிட்டேன். கால்ஷீட்ல இருந்து என்ன பிரச்னைனாலும் அவங்களே நேரடியா வந்து பேசினாங்க. அவங்க இறந்துட்டாங்கன்னு நியூஸ் கேள்விப்பட்டதும் அவங்க சைடுல இருந்து யார்கிட்ட விசாரிக்கறதுன்னுகூட எனக்குத் தெரியல. மீடியாவுல உள்ள நண்பர்கள் மூலம், எந்த ஹாஸ்பிட்டல்ல வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டு, அங்கே போய் அஞ்சலி செலுத்திட்டு வந்தேன்” எனக் குரல் உடைந்து பேசினார் மகிழ்வர்மன்.