படம் வெளியானது எனக்கே ஆச்சர்யம்தான் – சிம்பு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், சிம்பு நடித்து கடந்த வியாழன் (செப். 15) அன்று வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று    பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

அப்போது, பேசிய அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது,”இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏஆர் ரகுமான் உடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்தது பெருமையாக இருக்கிறது. இது எனது முதல் படம். ஆனால் அதை பற்றிய பதட்டம் எனக்கு வராமல் இருந்ததற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் நீரஜ் மாதவ் கூறியதாவது,”இது எனது முதல் தமிழ் படம், ஆனால் சென்னையில்தான் எனது படிப்பை முடித்தேன். தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. கௌதம் மேனன் சாரின் ரசிகனாக இருந்த எனக்கு, அவருடன் பணிபுரியும் வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன், சிலம்பரசன் அண்ணா ஒரு பேட்டியில் என்னை பாராட்டினார். தற்போது அவருடன் நடித்துள்ளது மகிழ்ச்சி. ஏஆர் ரகுமானின் இசையில் பாடியது எனக்கு மகிழ்ச்சி. படத்திற்கு நேர்மறையான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். 

‘ஆக்சன் அதிகம் வேண்டும்’ 

தொடர்ந்து நடிகர் சிம்பு,”என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இதுதான் முதல் முறை, எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது, இந்த கதையை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. 

இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன். அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள், நான் பரவாயில்லை. ஆனால் அது பலருக்கு வலியை தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி” என்றார். 

வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் ரூ.10.86 கோடி வசூல் செய்திருக்கிறது.  அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்று காலை நேர வசூலை தவிர்த்து அன்றைய தினம் மொத்தம் ரூ.8 கோடி வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. தமிழில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு வெர்ஷன் சில காரணங்களால் செப்டெம்பர்-15ம் தேதி வெளியிடப்பட முடியாமல் போன நிலையில் படம் இரண்டு நாட்கள் தாமதமாக செப்டம்பர்-17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  தமிழில் படம் வசூலை அள்ளியதை போன்றே தெலுங்கு பதிப்பிலும் படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

VTK

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.