பரந்தூர் விமான நிலையம்: அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் மக்களின் நியாயத்தை உணர்ந்து அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதற்காக சுமார் 4750 ஏக்கர் நிலம் கையகப்படுத்ததப்பட உள்ளது. இதில் குறிப்பிட்ட ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் மற்றும் நீர்நிலை மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 55 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான ஆலோசனைகளையும் தமிழக அரசுக்கு வழங்கி வருகின்றனர்.
image
இந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் மட்டுமின்றி முதியவர்கள் வயது வித்தியாசமின்றி தொல்.திருமாவளவனின் காலில் விழுந்து கதறி அழுது தங்களை காப்பாற்று வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் பேசியபோது.
நானும் ஒரு கிராமத்தில் பிறந்து எனது 17-வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியேறி இன்று வரை அங்கு இரவு தங்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆகவே கிராம மக்களின் இனிமையான வாழ்க்கை முறையை நான் நன்கு உணர்வேன். விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எவ்வித பேதமுமின்றி ஒன்றுகூடி போராடி வருவது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இதற்கு நல்லதோர் தீர்வு கிட்டும் என உறுதியளித்தார்.
image
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தொல்.திருமாவளவன்… பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு இரட்டை கொள்கையை கையாளுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். 1350 ஏக்கர் நீர்நிலை பகுதியை அழித்தால் தான் விமான நிலையம் அமைக்க முடியும் எனில் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் 100-க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை அழிப்பதும் ஆரோக்கியமானது அல்ல. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் நீர் கால்வாய் 7 கி.மீ அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு அரசு செயல் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும், நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்க மாற்றம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மக்களின் கோரிக்கைகளை ஏழுத்துப்பூர்வமாக முதல்வரை சந்தித்து வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.