தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
“தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை சதவீதமாக பாதிப்பு உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இதுவரை 368 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 5 வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 368 பேரில், 264 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் வீடுகளிலும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் சிகிச்சையில் உள்ளனர்” என்று கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் அதற்கு தற்போது அவசியம் இல்லை என்பதை அமைச்சர் தனது பேட்டி மூலம் கூறியுள்ளார்.
“லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் ஆசிரியர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், “எனது பேரன்,பேத்திக்குமே கூட காய்ச்சல் பாதித்து 3 தினங்கள் சிகிச்சை பெற்று தற்பொழுது நலமுடன் உள்ளனர். இதனால் அச்சப்படத்தேவையில்லை” என்று அமைச்சர் கூறினார்.