மதுரை: பழமையான பள்ளி கட்டிடங்களை அகற்றி, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டியவை. தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளின் மேற்கூரைகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை இடிந்து விழும் அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளன. குறிப்பாக, மதுரை, கோவை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.
எனவே, தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களை ஆய்வு ெசய்து, ஆபத்தான நிலையிலுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடங்கள் கட்டும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ‘‘அரசு பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைப்படி பழமையான கட்டிடங்கள் கண்டறியப்பட்டு பல இடங்களில் அகற்றப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் பணிகள் நடந்து வருகிறது’’ என கூறப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.