டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரிந்தர் சிங், இருமுறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதையடுத்து, அவர் முதல்வராக பதவி ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அம்ரிந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி நேர்ந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அம்ரிந்தர் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். நவம்பர் 2ம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார். பஞ்சாபின் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பின்னர், லண்டன் சென்று முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அம்ரிந்தர் சிங், சமீபத்தில் நாடு திரும்பினார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அம்ரிந்தர் சிங் சந்தித்தார். கடந்த 12ம் தேதி அமித் ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், தான் பாஜகவில் இணைய இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் பாஜக அலுவலகத்தில் இன்று காலை கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்த அமரிந்தர் சிங், மாலையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அதோடு, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை, பாஜகவில் இணைத்தார்.
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய கிரண் ரிஜிஜூ, பஞ்சாப் போன்ற ஒரு மாநிலம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்றும், அமரிந்தர் சிங் முதலமைச்சராக இருந்தபோது, தேசிய பாதுகாப்பில் ஒருபோதும் அவர் அரசியல் செய்தது இல்லை என்றும் பாராட்டு தெரிவித்தார்.